அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் திடீர் போராட்டம்

திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் திடீர் போராட்டம் நேர்முக தேர்வுக்கு எதிர்ப்பு
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 60 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை பணிக்கு வந்த விரிவுரையாளர்களிடம் நாளை(புதன்கிழமை) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேர்முகத்தேர்வு நடத்தி மீண்டும் பணியில் சேர்க்க இருப்பதாகவும் அதுவரை வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போடவேண்டாம் எனவும் கல்லூரி முதல்வர் நாகலட்சுமி கூறினார். இதை ஏற்க மறுத்த அவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து திடீர் போராட்டம் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கல்லூரியில் பணிபுரிந்து வருகிறோம். திடீரென நேர்முக தேர்வு நடத்தி மீண்டும் பணியில் சேர்க்க இருப்பதாக கூறுவதால் நாங்கள் வேலை இழக்கக்கூடும். இதனால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கல்லூரியில் தற்போதுள்ள பொறுப்பு முதல்வரால் சரியாக செயல்பட முடியாத நிலை உள்ளதால் நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும். எங்களுக்கு நேர்முகத்தேர்வு வேண்டாம் என விரிவுரையாளர்கள் கூறினர்.
இதுபற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு பணியில் சேருமாறு கூறியதன் பேரில் விரிவுரையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.






