'மதுபான விற்பனைக்கு தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?' - ஐகோர்ட்டு கேள்வி


மதுபான விற்பனைக்கு தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? - ஐகோர்ட்டு கேள்வி
x

பார்கள் நடத்த சட்டத்தில் அனுமதி உள்ள நிலையில், மதுபான விற்பனைக்கு தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும் என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

தஞ்சாவூரில் கடந்த 21-ந்தேதி டாஸ்மாக் பாரில் சயனைடு கலந்த மது அருந்தி 2 பேர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை சோதித்து உறுதிப்படுத்தும் வரை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் தரமானவையா, அதில் எத்தனை சதவீதம் எத்தில் ஆல்கஹால் உள்ளது, அந்த மதுபானங்கள் அருந்துவதற்கு உகந்தவையா என்பனவற்றை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மதுபானங்களின் தரத்தை உறுதி செய்யும் வரை, மதுபானங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி புகழேந்தி மற்றும் நீதிபதி லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுவிலக்கு சட்டத்தில் பார்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மது விற்பனைக்கு தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

மதுவிலக்கு சட்டத்தை எதிர்த்து தான் வழக்கு தொடர முடியும், அதுவும் சுப்ரீம் கோர்ட்டில் தான் வழக்கை தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மதுவிலக்கு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளிடம் தான் முறையிட முடியும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.



Next Story