பூட்டிய வீட்டுக்குள் கணவன்-மனைவி பிணமாக கிடந்தனர் - மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்தாரா?


பூட்டிய வீட்டுக்குள் கணவன்-மனைவி பிணமாக கிடந்தனர் - மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்தாரா?
x

பூட்டிய வீட்டுக்குள் கணவன்-மனைவி பிணமாக கிடந்தனர். மனைவியை கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6-வது தெருவில் வசித்து வந்தவர் சக்திவேல் (வயது 44). இவருடைய மனைவி துலுக்கானம் (35). இவர்கள் இருவரும் சென்னை மாநகராட்சி 128-வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் இருவரும் மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக இவர்களது வீடு பூட்டியே கிடந்தது. இருவரும் வெளியே எங்கும் சென்றிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கருதினர். நேற்று காலை இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். கதவு உளபுறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சக்திவேல் தூக்கில் தொங்கிய நிலையிலும், துலுக்கானம் கட்டிலில் படுத்த நிலையிலும் பிணமாக கிடந்தனர். அவர்கள் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என் தெரிகிறது. இதனால் அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது.

போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் கடந்த 25-ந் தேதி இரவு வீட்டுக்குள் சென்ற கணவன்-மனைவி இருவரும் அதன்பிறகு வெளியே வரவில்லை என தெரியவந்தது. எனவே அன்றே அவர்கள் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் திட்டமிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கணவன்-மனைவி தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அந்த விரக்தியில் சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story