சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்டோ மோதி கணவன், மனைவி பலி
அச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்டோ மோதி கணவன், மனைவி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே மண் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. லாரியில் வந்தவர்கள் சாப்பிடுவதற்காக லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
ஆட்டோவை காஞ்சீபுரம் மாவட்டம் மலையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் (27) ஓட்டி வந்தார். ஆட்டோவில் அவருடைய மனைவி உமா (25), 2 குழந்தைகள், மாமியார், மாமனார், மைத்துனர் இருந்தனர். பர்வதமலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் ஆட்டோ டிரைவர் குமார் (27) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடைய மனைவி உமா, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். குமாரின் மாமியார், மாமனார், மைத்துனர், 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.