மரக்காணத்தில்பஸ் மோதி கணவன்-மனைவி பலி


மரக்காணத்தில்பஸ் மோதி கணவன்-மனைவி பலி
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் கணவன்- மனைவி பலியானார்கள்.

விழுப்புரம்


மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவரது மனைவி சுந்தரி (50). இவர்கள் நேற்று மரக்காணம் அருகே ஆலத்தூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே புதுவையில் இருந்து சென்னைக்கு சென்ற தமிழக அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த அவர்கள் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீஸ் விசாரணை

விபத்து பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பிய போது பஸ் மோதி கணவன்-மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story