வரதட்சணை கேட்டு முதல் மனைவியை வீட்டைவிட்டு துரத்திய கணவர் கைது
சங்கராபுரத்தில் வரதட்சணை கேட்டு முதல் மனைவியை வீட்டைவிட்டு துரத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்,
சங்கராபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் இலாகி (வயது 53). இவரது மனைவி மாஜிதா (45). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இதையடுத்து பரிதா என்பவரை இலாகி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இலாகி மற்றும் உறவினா்கள் கலீம் (50), இவரது மனைவி ஷர்மிளா, நஜுபுதீன் மனைவி மலிகா, சாதிக்பாஷா மனைவி பர்வீன், ஜாபீர் என்கிற ஜாபர், சாதிக்பாஷா, ஷாஹேர், இலாகியின் இரண்டாவது மனைவி பரிதா ஆகிய 9 பேர் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி மாஜிதாவை வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாஜிதா, இலாகி வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இலாகி உள்ளிட்ட 9 பேர் சேர்ந்து மாஜிதாவை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாஜிதா திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இலாகி உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப்பதிவு செய்து, இலாகியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.