ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் குத்திக்கொன்றேன்: சிறுவன் கொலை வழக்கில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் குத்திக்கொன்றேன்: சிறுவன் கொலை வழக்கில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 12 Jan 2024 6:47 AM IST (Updated: 12 Jan 2024 7:14 AM IST)
t-max-icont-min-icon

8 வயது சிறுவன் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் கிராமத்தில் கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த போலீஸ் நிலையம் முன் அதே பகுதியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுவன் கழுத்து, கை, வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.

இதுகுறித்து உடனடியாக சூரங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளி யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதில் வேம்பார் பகுதியைச் சேர்ந்த தாமஸ் (19) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர், சிறுவனை கத்தியால் குத்திக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, நேற்று முன்தினம் சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவன் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை. இதையடுத்து அவனது தாய், தனது மகளை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக சென்றுவிட்டார். தந்தையும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் சிறுவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். இதை அறிந்த தாமஸ், சிறுவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அங்கிருந்த சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவன் மறுத்து சத்தம் போட்டுள்ளான்.

இதனால் ஆத்திரம் அடைந்த தாமஸ் தான் மறைத்து வைத்து இருந்த 2 சிறிய ரக கத்தியால் சிறுவனின் கழுத்து, வயிறு, கைப்பகுதியில் கொடூரமாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவனை தூக்கிச்சென்று கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையம் முன் வீசிவிட்டுச் சென்றுள்ளார். இதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். மேற்கண்டவாறு தாமஸ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 8-வயது சிறுவனை 19 வயது வாலிபர் குத்திக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story