ஐ.ஏ.எஸ். பயிற்சி கட்டிடம், கோவில் இடிப்பு
மயிலம் அருகே ஐ.ஏ.எஸ். பயிற்சி கட்டிடம், கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலம்
மயிலம் அருகே உள்ள பாலப்பட்டு பகுதியில் தனியார் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பயிற்சி மையத்தின் அருகே சாய் பாபா கோவிலும் உள்ளது.
இந்த நிலையில் பயிற்சி மையம் அமைந்துள்ள இடத்துக்கும், அருகில் நிலம் வைத்துள்ள வேறு ஒரு நபருக்கும் இட பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பொக்லைன் எந்திரம் மூலம் ஐ.ஏ.எஸ். பயிற்சி கட்டிடம், சாய்பாபா கோவில் ஆகியவற்றை எதிர் தரப்பினர் இடித்துள்ளனர். இதை நேற்று காலை பயிற்சிக்கு வந்த மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மயிலம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.