அதிக வருமானம் வரும் கோவில்களை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும்-முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வலியுறுத்தல்
அதிக வருமானம் வரும் கோவில்களை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வலியுறுத்தி உள்ளார்.
ராமேசுவரம்,
அதிக வருமானம் வரும் கோவில்களை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வலியுறுத்தி உள்ளார்.
வழிபாட்டு பயிற்சி முகாம்
ராமேசுவரம் கோ சுவாமி மட வளாகத்தில் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் கடந்த 2-ந்தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிராம கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர்.இதன் நிறைவு விழா நடைபெற்றது. தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம்ஜி தலைமை தாங்கினார். அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், விசுவ இந்து பரிசத் மாநில இணை பொது செயலாளர் ராமசுப்பு, மண்டல அமைப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில்களில் ஒப்படைக்க வேண்டும்
தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதில் அரசு கவனம் செலுத்துவதில்லை. சுமார் 2,500 சிலைகள் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து வருமானம் பார்ப்பதில்லையே அரசு கவனம் செலுத்துகிறது. இந்த சிலைகளை எங்கெங்கு வைக்க வேண்டுமோ அந்தந்த கோவில்களில் ஒப்படைக்க வேண்டுமே தவிர இது அருங்காட்சியகத்தில் வைப்பது மிகவும் மோசமான செயல். தமிழ்நாட்டில் சுமார் 36 ஆயிரம் கோவில்கள் வருமானத்தை அள்ளிக் கொடுக்கிறது ஆனால் அந்த கோவில்களை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் சீரமைக்கவும் குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் துறைக்கு அர்ப்பணிப்போடு செயலாற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
அதிக வருமானம் வரும் கோவில்களுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து உள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.