புதிதாக மதுகுடிக்க வருபவர்களை கண்டறிந்து கவுன்சிலிங்: அமைச்சர் முத்துசாமி பேட்டி
புதிதாக மதுகுடிக்க வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
கோவை,
அமலாக்கத்துறை தமிழகத்தில் ஏற்கனவே சோதனை நடத்தி இருக்கிறது. தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்துகிறது. இந்த சோதனையானது திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த சோதனையில் இருந்து அமைச்சர் பொன்முடி மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற சோதனையின் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள். இதுபோன்ற சோதனைகளை கண்டு நாங்கள் கவலைப்படுவது இல்லை. எங்களுடைய மக்களுக்கான பணி வழக்கம் போல் நடைபெறும்.
டாஸ்மாக் விவகாரத்தை பொறுத்தவரை முதலில் தொழிலாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசி அதற்கு தீர்வு காண இருக்கிறோம். மதுபானங்களை இறக்குவது குறித்து டாஸ்மாக் தொழிற்சங்கத்தினருடன் பேசி வருகிறோம்.
கவுன்சிலிங்
டெட்ரா பேக் (பாக்கெட்) மூலம் மதுவிற்பனை செய்யும் திட்டம், 90 மி.லி. மதுபானம் கொண்டு வருவதும் பரிசீலனையில் தான் உள்ளது. இந்த திட்டம் வரலாம், வராமலும் போகலாம். இந்த அரசை பொறுத்தவரை காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்கும் எண்ணம் இல்லை.
கடினமான பணிகளை மேற்கொள்கிறவர்கள் தான் காலையில் மது குடிக்கிறார்கள். அவர்களை குடிகாரன் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஆகவே அவர்களை குறைசொல்வதை விடுத்து உரிய ஆலோசனை கூறுங்கள்.
புதிதாக குடிக்க வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டு உள்ளோம். இதேபோல் வயதானவர்கள், உடல் மோசமான நிலையில் உள்ளவர்கள் குடிப்பதை தடுக்க கவுன்சிலிங் கொடுக்க உள்ளோம். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நூற்பாலைகள் உரிமையாளர்களிடம் அரசு தரப்பில் பேசி இருக்கின்றோம். அது தொடர்பான முடிவுகள் விரைவில் சொல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.