மன்னார்குடி கோவிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள் - அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு
திருடப்பட்ட 3 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் இருந்த விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 உலோக சிலைகள் திருடப்பட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இந்த விசாரணையின் போது 1959-ம் ஆண்டுக்குப் பிறகு அந்த 3 சிலைகளும் எங்கு இருக்கிறது என்பது தொடர்பான எந்த தகவல்களும் அரசு ஆவணங்களில் இடம்பெறவில்லை என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து பிரெஞ்ச் இஸ்டிட்யூட் ஆஃப் பாண்டிச்சேரி என்ற அமைப்பின் மூலம் அந்த சிலைகளின் புகைப்படங்களைப் பெற்ற போலீசார், அவற்றை உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் இருக்கும் சிலைகளுடன் ஒப்பிட்டு பார்க்க நடவடிக்கை எடுத்தனர்.
இதன் மூலம் திருடப்பட்ட 3 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்ட்டி ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிலைகளை மீட்பதற்காக அந்த அருங்காட்சியகத்திற்கு கடிதம் எழுதியுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், விரைவில் அந்த சிலைகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.