ஜெயலலிதாவின் விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறலாம்: டிடிவி தினகரன்


ஜெயலலிதாவின் விசுவாசிகள் ஓரணியில் திரண்டால்  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறலாம்: டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 19 Nov 2022 8:18 AM GMT (Updated: 19 Nov 2022 8:19 AM GMT)

ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியுமென அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சுவாமிமலை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்வதற்கு முன் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் எதுவும் செய்ய முடியாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடிய வில்லை. நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததை போல் எடப்பாடியால் சந்திக்க முடியுமா ? இவர் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர்.

ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு என அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது.

அரசு நல்லது செய்தால் வரவேற்க வேண்டும். இதனால் நான் தி.மு.க. கூட்டணிக்கு செல்வேன் என எதிர்பார்க்காதீர்கள். அரசியலில் எனது உயரம் என்ன என எனக்குத் நன்றாக தெரியும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்பத்திற்கு ரூ. 1000 நிவாரணம் என்பது மிக, மிகக் குறைவு. இதனை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story