அதிமுக பொதுக்குழு நடந்தால், அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் - வைத்திலிங்கம் பேட்டி
அதிமுக பொதுக்குழு நடந்தால், அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று வைத்திலிங்கம் கூறினார்.
சென்னை,
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேவேளையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜூலை 11 பொதுக்குழு செல்லாது, அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது. அதிமுக பொதுக்குழு நடந்தால், அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக தலைமை நிலைய நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி ஒரு பதவியே இல்லை. கட்சி விதிகளில் பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்க்கு மட்டுமே அதிகாரமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.