"சாதி என்னும் தீயை அணைக்காமல் இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும்" - மக்கள் நீதி மய்யம்


சாதி என்னும் தீயை அணைக்காமல் இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும் -  மக்கள் நீதி மய்யம்
x

மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவரே, கெட்டுப் போகச் செய்யலாமா? என மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவரிடம் சாதி ரீதியாகப் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது இதனைத் தொடர்ந்து, ஆடியோ தொடர்பான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனா ஆகியோரிடம் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பலதண்டாயுதபாணி விசாரணை மேற்கொண்டார்.

அந்த விசாரணை முடிவில், சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனாவைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களிடம் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே சாதி ரீதியாகப் பேசிய விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சாதி என்னும் தீயை அணைக்காவிட்டால், அது எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சாதிப்பற்று கூடாது என்று மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, சாதி வெறியைத் தூண்டுவதுபோல பேசுவது ஏற்கத்தக்கதல்ல.

இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஆசிரியர், பெற்றோர், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story