இலங்கை தமிழர்கள் தாய் நாட்டுக்கு செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்


இலங்கை தமிழர்கள் தாய் நாட்டுக்கு செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
x

இலங்கை தமிழர்கள் தாய் நாட்டுக்கு செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் அருகே மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு வாழும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.11 கோடியில் 220 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல்கட்டமாக இலங்கை தமிழர்கள் 7 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.317 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறக்க உள்ளார். வேலூரில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் 55 தொகுப்புகளாக 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. 6 மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும்.

தமிழகம் நோக்கி வருகின்ற இலங்கை தமிழர்களை தாய் உள்ளத்தோடு தமிழக அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது.இலங்கை வாழ் தமிழர்களுக்கு குடியுரிமை பெற மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தால் அதற்கேற்ப சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். அவர்களை தமிழர்கள் என்ற உணர்வோடு பாதுகாத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story