'வள்ளலார் உயிரோடு இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீட்டை பாராட்டி இருப்பார்' பிரதமர் நரேந்திரமோடி பேச்சு


வள்ளலார் உயிரோடு இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீட்டை பாராட்டி இருப்பார் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
x

‘வள்ளலார் உயிரோடு இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீட்டை பாராட்டி இருப்பார்' என்று பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வழியாக பேசினார்.

சென்னை,

வள்ளலாரின் 200-வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், அவருக்கு அமர்ந்த நிலையில் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்ததுடன், அணையா தீபத்தையும் ஏற்றி வைத்தார். சிலைக்கு மலர்தூவி மரியாதையும் செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி எல்.முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி வழியாக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி கட்டமைப்பில் வளர்ச்சி

நவீன கல்வித்திட்டத்துக்கு வள்ளலார் முக்கியத்துவம் அளித்தார். இளைஞர்கள் தமிழிலும், சமஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் புலமைபெற வேண்டும் என்று அவர் விரும்பினார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வி கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.

தேசிய கல்விக்கொள்கை கல்வித்துறையில் சிறந்த மாற்றங்களை அடைய வைக்கும். இதில் புதிய சிந்தனை, ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இப்போது, இளைஞர்கள் தங்களது வட்டார மொழிகளிலேயே மருத்துவம், என்ஜினீயரிங் படிக்க முடியும்.

மகளிர் இடஒதுக்கீடு சட்டம்

எதையும் முன்கூட்டியே சிந்தித்தவர் வள்ளலார். சமூக சீர்திருத்தத்தை எடுத்துக்கொண்டால், கடவுளை பற்றிய வள்ளலாரின் பார்வை பல்வேறு மதங்கள், வகுப்புகள், நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவை. ஒவ்வொரு அணுவிலும் அவர் கடவுளின் அம்சத்தை கண்டார்.

அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை இன்று வள்ளலார் உயிரோடு இருந்திருந்தால் பாராட்டி இருப்பார் என நான் நம்புகிறேன். வள்ளலாரின் வார்த்தைகள் வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் எளிமையானவை.

தரமான கல்வி வழங்குவோம்

அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை வலியுறுத்தும் வள்ளலாரின் போதனைகளை நாம் பரப்புவோம். அவரது இதயப்பூர்வமான சிந்தனைகள் தொடர்பாக நாம் கடினமாக உழைப்போம். ஒருவரும் பட்டினியுடன் இல்லாதிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வோம்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வழங்குவோம். இந்த மாமனிதரின் 200-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின்போது அவருக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் பேச்சு

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

நாம் எல்லோரும் ஒன்று என்னும் வள்ளலாரின் கருத்தே சனாதனத்தின் ஆணிவேர். சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் என கூறும் நபர்களை என்ன சொல்வது என தெரியவில்லை, நான் ஒரு சனாதனவாதியாக இருப்பதால் அவர்கள் நம்மை சேராதவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சனாதனத்தில் மற்றவர்கள் என யாரும் இல்லை. என்னை அவமானப்படுத்தினாலும் நான் அவர்களை ஒதுக்க முடியாது அதுதான் சனாதனம்.

இந்தியா என்பதன் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால்தான் அம்பேத்கர் 'இந்தியா' என்பதற்கு 'பாரத்' என அரசியல் சாசனத்தில் எழுதியுள்ளார். 'பாரதம்' என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனை பாட புத்தகத்தில் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

பொருளாதாரத்தில் 5-வது இடம்

'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என வள்ளலார் கூறிய கருத்துகள் சனாதனத்தை வெளிப்படுத்தும்போது எப்படி மனிதர்கள் மத்தியில் வேற்றுமையை சனாதனம் வலியுறுத்த முடியும். வன்முறை சனாதனத்திற்கு எதிரானது. புத்தர் போன்று ஒவ்வொரு காலமும் சனாதனத்தை காப்பதற்கு, அசுத்தங்களை சுத்தம் செய்யவும் ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர்.

இன்று உலக அளவில் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் உள்ளோம். வளர்ந்து வரும் நாட்டில் முதல் இடத்தில் உள்ளோம். இன்னும் சில ஆண்டுகளில் 3-வது இடத்தை இந்தியா அடைந்துவிடும். வெறும் அறிவியல், பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல் ஆன்மிகத்தோடு வளர வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வள்ளலார் சொல்கிறார். அதனால் தான் அவரை கவர்னர் மாளிகையில் வைத்துள்ளோம். இங்கு வருபவர்களுக்கு வள்ளலார் என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டுவார். சனாதனம் வலியுறுத்தும் ஒரே குடும்பமாக வளர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story