பெண்கள் படித்தால் குடும்பமே வளர்ச்சி அடையும்:பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேச்சு


பெண்கள் படித்தால் குடும்பமே வளர்ச்சி அடையும்:பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:46 PM GMT)

பெண்கள் படித்தால் குடும்பமே வளர்ச்சி அடையும் என்று கோனேரிக்குப்பம் சட்டக்கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

கருத்தரங்கு

திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் டாக்டர் ராமதாஸ் அறக்கட்டளையில் உள்ள சட்டக் கல்லூரியில் அரசியலில் இன்றைய சூழல்கள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினர் சிவபிரகாசம் முன்னிலை வகித்தார். சட்டக் கல்லூரியின் முதல்வர் அசோக்குமார் வரவேற்றார். இதில் சிறப்பான கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டக்கல்லூரி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் டாக்டர் ராமதாஸ் கலந்துரையாடினார்.

குடும்பமே வளர்ச்சி பெறும்

அப்போது அவர் பேசுகையில், மாணவ செல்வங்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் செல்வங்கள் தான். கடந்த காலங்களில் பல குடும்பங்களில் பெற்றோர்கள், பாட்டனார்கள் கையெழுத்து போடுவதற்கு மாட்டு வண்டியின் மையை தடவி கை நாட்டு வைப்பார்கள். ஆனால் தற்போது நீங்கள் அனைவரும் கணினியை பயன்படுத்துகிறீர்கள். இதனால் உலக நடப்புகளையும், சந்திர மண்டலத்தில் உள்ளதையும் நீங்கள் பார்க்க முடிகிறது. அந்த காலத்தில் பெண்கள் சிரிக்க கூடாது என சொல்வார்கள். இப்போது அது போல் யாரேனும் கூறி, பார்த்தால் நீங்கள் விட மாட்டீர்கள். பெண்கள் படித்தால் அந்த குடும்பமே வளர்ச்சி பெறும். ஆண்கள் படித்தால் ஆணுக்கு மட்டுமே பயன்படும். படிப்பை விட முக்கியமானது ஒழுக்கம். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

5 பாடப்பிரிவுகள்

18 வயது வரை உள்ள பெண் பிள்ளைகள் தெய்வங்கள். 18 வயதுக்கு மேல் உள்ள பெண் பிள்ளைகள் தேவதைகள். பெண்களை மட்டும் உயர்வாக பேசுகிறேன் என்று ஆண் பிள்ளைகள் நினைக்க கூடாது. ஏனெனில் தாய் இல்லாமல் யாரும் இல்லை. நீங்கள் அனைவரும் நன்கு படிப்பதற்கான அனைத்து வசதிகளையும் சரஸ்வதி கல்வி கோவில் சார்பில், பொறியியல் கல்லூரியில் மேலும் 5 பாடப்பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்படும். கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்றார். நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் பரமகுரு, கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வீரமுத்து உள்பட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story