கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x

கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் காவல்துறையின் அலட்சியத்தால் நடந்த ஒன்றாக கருதமுடியாது. ஆட்சியாளர்களின் ஆதரவுடன், அரசு எந்திரத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர்களாக பணியாற்றும் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் வரை அனைவரின் ஆதரவும் கள்ளச்சாராய வணிகர்களுக்கு இருந்திருக்கிறது.

இந்த அளவுக்கு வலிமையான பின்னணி கொண்டவர்களின் துணையுடன் நடந்த கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் தொடங்கி, நேர்மையான திசையில் பயணிக்க வேண்டும். ஆனால், முதல் தகவல் அறிக்கையே நீதியை படுகொலை செய்துள்ளது. கள்ளச்சாராய சாவுகளின் களமாக இருந்த கருணாபுரம் என்ற பகுதி கள்ளக்குறிச்சி நகரின் மையத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றுக்கு நன்கு தெரிந்தே தான் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு மூல காரணமானவர்கள் என்று பல தரப்பாலும் குற்றஞ்சாட்டப்படும் இருவர், கள்ளச்சாராய சாவுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்திற்கு வரும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுடனும், உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் இணைந்து கூட்டங்களில் பங்கேற்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது துணை கண்காணிப்பாளர் நிலையிலுள்ள சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் அவர்களை எவ்வாறு விசாரிக்க முடியும். தமிழக காவல்துறை அதிகாரிகளால், அதிகாரம் பெற்ற இவர்களின் அருகில் கூட நெருங்க முடியாது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story