ஆனைமலையில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஓய்வூதியர்கள் காலி தட்டுகள் ஏந்தி போராட்டம்
ஆனைமலையில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஓய்வூதியர்கள் காலி தட்டுகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனைமலை
ஆனைமலையில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஓய்வூதியர்கள் காலி தட்டுகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலித்தட்டுகள் ஏந்தி போராட்டம்
சத்துணவு ஓய்வூதியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.7,850-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கையில் காலித் தட்டுகளை ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆனைமலை முக்கோணத்தில் சத்துணவு ஊழியர்கள் கைகளில் காலி தட்டுகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பஜராமன் தலைமை வகித்தார். அருணாச்சலம் முன்னிலை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது:- அரசின் சத்துணவு திட்டத்தில் 40 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி தற்போது ஓய்வுபெற்று பொருளாதார நெருக்கடியில் ரூ.2 ஆயிரம் மட்டுமே ஓய்வூதியமாக பெற்று வருகிறோம்.
போலீஸ் பாதுகாப்பு
இதனால் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களின் வாழ்கை அவலநிலையில் உள்ளது. எனவே குறைந்த பட்ச ஓய்வூதியமான ரூ.7,850-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். பணியின்போது பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஓய்வூபெற்ற பின்னரும் கிடைக்கவில்லை. இதனை உடனே வழங்க வேண்டும். ஓய்வூபெற்ற ஊழியர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க கேட்டுக்கொள்வது போன்ற கோரிக்கைகளுக்காக தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். மேலும் இதுதொடர்பாக மனு மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை கொடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தையொட்டி ஆனைமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சுல்தான்பேட்டை
சத்துணவு ஊழியர்களை அரசு பணியாளராக பணி அமர்த்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையல் மற்றும் சத்துணவு உதவியாளருக்கு ரூ.3 லட்சம் ஒட்டுமொத்தமாக வழங்க வேண்டும். முதல்-அமைச்சரின்காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியரிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, சுல்தான்பேட்டையில் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) சத்துணவு திட்ட பாதுகாப்பு உரிமை மீட்பு என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது என்று சத்துணவு ஊழியர்கள் தெரிவித்தனர்.