காவிரியில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


காவிரியில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:46 PM GMT)

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி சீர்காழி ரெயில் நிலையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி சீர்காழி ரெயில் நிலையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நீர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில் நிலையம் முன்பு காவிரி நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்து தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வேட்டங்குடி சீனிவாசன், விஸ்வநாதன், கோவி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி

ஆர்ப்பாட்டத்தில் காவிரி நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் கருகும் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிரை காப்பாற்றிடவும், 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி தொடங்கிடவும் கர்நாடகாவிடம் இருந்து உரிய தண்ணீரை காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட அடிப்படையில் பெற்று தர வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது, தமிழ்நாட்டில் ராசிமணலில் அணை கட்ட நடவடிக்கை எடு, மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்துடன் ஆன செயல்பாட்டை முடக்காதே, காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் உமையாள்பதி ரவிச்சந்திரன், முருகேசன், சுரேஷ், ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story