சென்னையில், கடந்த 2 ஆண்டுகளில் 19.70 சதவீதம் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது - போக்குவரத்து போலீசார் தகவல்


சென்னையில், கடந்த 2 ஆண்டுகளில் 19.70 சதவீதம் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது - போக்குவரத்து போலீசார் தகவல்
x

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் விபத்து உயிரிழப்பு 19.70 சதவீதம் குறைந்துள்ளதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சென்னை

போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் விபத்து உயிரிழப்பை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. அதிகரிக்கப்பட்ட அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் 90 சதவீதத்துக்கு மேல் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகிறார்கள். இரு சக்கரவாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களிடமும் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் கடுமையாக்கப்பட்டு உள்ளது.

இது போன்ற கடும் நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் 19.70 சதவீதம் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது. 2021-ம் ஆண்டில் 265 விபத்து வழக்குகள் பதிவாகி 269 பேர் உயிர் இழந்தனர். 2022-ல் வழக்கு எண்ணிக்கை 238 ஆக குறைந்து, உயிரிழப்புகளும் 240 ஆக குறைந்தது. சுமார் 25 பேர்களின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது.

2023-தற்போதைய நிலவரப்படி கடந்த ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடும்போது, 214 வழக்குகள் மட்டும் பதிவாகி, உயிரிழப்பும் 216 ஆக உள்ளது. 10 சதவீதம் உயிரிழப்பு குறைந்துள்ளது. விபத்து உயிரிழப்புகளை மேலும் குறைக்க நடவடிக்கை தொடரும்.

சென்னையில் 104 விபத்து தடங்கள் கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளில் சாலை உள்கட்டமைப்புகள் ரூ.1 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story