தேனியில்ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள்:அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்


தேனியில்ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள்:அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:45 PM GMT)

தேனியில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

தேனி


தேனி அருகே உள்ள கோட்டூரில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன பாலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு நவீன பாலகத்தை திறந்து வைத்தார். பின்னர், தேனி தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். இதையடுத்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு, ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

விழாவைத் தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 'தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களில் முறையாக ஆவின் நிறுவனத்துக்கு அதிக அளவில் வழங்குவோருக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படும். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க வேண்டும்' என்றார்.

பின்னர் அரசுத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் கலந்தாலோசனை கூட்டம் நடத்தினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் மற்றும் ஆவின் அதிகாரிகள், அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story