தேனியில்விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


தேனியில்விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

தேனியில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

தேனி

போடி சுப்புராஜ் நகரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் மகன் சந்தோஷ்குமார் (வயது 27). இவர், கடந்த 2012-ம் ஆண்டு போடி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அணைக்கரைப்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து காயம் அடைந்த சந்தோஷ்குமார் இழப்பீடு கேட்டு தேனி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல்கள் மாரியப்பன், ரதிதேவி ஆகியோர் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் அவர் மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.

அதன்பேரில் இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய கடந்த மாதம் 25-ந்தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சந்தோஷ்குமார் தனது வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு பணியாளருடன் அரசு பஸ்சை ஜப்தி செய்வதற்காக தேனி புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு குமுளியில் இருந்து திண்டுக்கல் செல்வதற்காக நின்று கொண்டு இருந்த அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. அந்த பஸ் கண்ணாடியில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர் அந்த பஸ் தேனி கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story