கரூர் பகுதியில் விண்ணைத் தொட்ட தக்காளி வீதிக்கு வந்தது


கரூர் பகுதியில் விண்ணைத் தொட்ட தக்காளி வீதிக்கு வந்தது
x

கரூர் பகுதியில் விண்ணைத் தொட்ட தக்காளி வீதிக்கு வந்து மாடுகளுக்கு இரையானது.

கரூர்

ரூ.200-க்கு விற்ற தக்காளி

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கரூரிலும் தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததால் இல்லத்தரசிகள், ஓட்டல் உரிமையாளர்கள் கடும் அவதி அடைந்தனர். அப்போது ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளிடம் நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு கிலோ ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்தாலும், உற்பத்தி அதிகரித்ததை தொடர்ந்து விண்ணைத் தொட்ட தக்காளி விலை சரிந்து தற்போது 1 கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் பலர் தக்காளிகளை அதிக அளவில் வாங்கி சென்று தெருக்களில் கூவி, கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

மாடுகளுக்கு இரையானது

இந்தநிலையில் வேலாயுதம்பாளையம் பகுதியில் வியாபாரிகள் சிலா் தங்களது மோட்டார் சைக்கிளில் தக்காளிகளை வைத்து தெரு, தெருவாக கொண்டு சென்று 1 கிலோ ரூ.10-க்கு விற்றுள்ளனர். ஆனாலும் தக்காளிகளை யாரும் வாங்க முன்வரவில்லை. இதையடுத்து அந்த வியாபாரிகள் விற்ற தக்காளிபோக மீதி உள்ளதை வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கொட்டி விட்டு சென்று விட்டனர்.

இதனை அந்த பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள் தின்று பசியாறியது. கடந்த மாதம் தக்காளியை வாங்க வழியில்லாமல் இருந்த பொதுமக்களுக்கு, தற்போது வீதிக்கு வந்த தக்காளியை பார்த்ததும் மன வருத்தத்துடன் சென்றதை காண முடிந்தது.


Next Story