பொள்ளாச்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
பொள்ளாச்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
போராட்டம்
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 260 பேர் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், 43 பேர் ஒப்பந்த குடிநீர் விநியோகிப்பாளராக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் குறைந்தபட்ச கூலி நிர்ணய சட்டத்தின் படி நகராட்சியில்ரூ.606-ம், பேரூராட்சிகளில் ரூ.529-ம் தினக்கூலியாக வழங்க வேண்டும். ஆனால், பொள்ளாச்சி நகராட்சி, பேரூராட்சிகளில் ரூ.475 மட்டும் கூலியாகவழங்கப்படுகிறது. இதற்கு மாற்றாக குறைந்தபட்ச கூலி நிர்ணய சட்டத்தின் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த 2-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தமிழ்நாடு அம்பேத்கர் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணிகள் பாதிப்பு
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் நகரப் பகுதியில் தூய்மை பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன் தினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கவுதமன் ஆகியோர் சங்கப் பிரதிநிதிகள், தூய்மை பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கூறியதாவது:-
நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை குறித்து சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களின் ஊதிய உயர்வு குறித்து நகராட்சி மன்றத்தில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது என்றார். சங்க நிர்வாகிகள் கூறுகையில், பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு செல்ல உள்ளனர் என்றனர். அதன்படி நேற்று முதல் தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பியதால் நகராட்சி பணியில் தூய்மை பணி தீவிரமடைந்துள்ளது.