நாமக்கல்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம்


நாமக்கல்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம்
x

நாமக்கல் அருகே உள்ள வினைதீர்த்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம், செல்லப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வினைதீர்த்தபுரத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாக புறநோயாளிகள் பிரிவிற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடந்தது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பிலான புறநோயாளிகள் பிரிவின் புதிய கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர்கள் சுப்பிரமணியன், டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றினர்.

அதைத்தொடர்ந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான கோனூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கட்டிடம், எர்ணாபுரம் மற்றும் பிள்ளாநல்லூரில் தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உடல் நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் என மொத்தம் ரூ.93 லட்சம் மதிப்பிலான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு என பிரத்தேகமாக உருவாக்கப்பட்ட "தாய்மையுடன் நாம்" என்ற செல்போன் செயலியின் சேவையை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:-

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு என பிரத்தியேகமாக செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களின் முழு விவரங்களும் பதிவு செய்யப்பட்டு, டாக்டர்கள் மற்றும் செவிலியர்களால் கண்காணிக்கப்படுவார்கள். இது தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டமாகும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. நாமக்கல்லில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் லாரிகள் மூலம் குடிநீரை வழங்கி வருகிறது.

ஆனால் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அது போதாது. எனவே நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ரூ.7.83 கோடியில் காவிரியில் இருந்து பிரதான குழாய்கள் மூலம் குடிநீரை கொண்டு வர நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. அந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியை 3 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சுப்ரமணியன் பேசினார்.


Next Story