நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வாக்குவாதம்
நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சியின் இயல்பு கூட்டம் நகர் மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியவுடன் பிரதமர் நரேந்திர மோடியின் தாய் இறப்பிற்கும், நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் ஜாபர் அலி மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோரின் மறைவிற்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றபோது கட்சி பாகுபாடின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவர் என்றும் அனைத்து வார்டுகளுக்கும் பணிகள் பிரித்துக் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தீர்கள். ஆனால் தற்போது குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டும் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த பாரபட்சம் என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட தி.மு.க. உறுப்பினர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக சில தி.மு.க உறுப்பினர்களும் பேசினர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின் மீண்டும் விவாதம் நடைபெற்றது. துணை தலைவர் லியாகத் அலி கூறுகையில், அனைவருக்கும் பணிகள் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. தற்போது வேலைகள் கொடுக்கும் நிலையில் இல்லை. மேலும் நாம் நகர்மன்ற உறுப்பினராக பதவி ஏற்று 10 மாதங்கள் ஆகிவிட்டது. நமது நகராட்சி நிதி நிலைமை மிகவும் நலிவடைந்து நிலையில் உள்ளது. புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சட்டசபையில் பேசி புதுக்கோட்டை நகராட்சிக்கு உண்டான கடனை தள்ளுபடி செய்ய குரல் கொடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள் நகராட்சி மூலம் விதிக்கப்பட்ட சொத்துவரி மிகவும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சில பகுதிகளில் 8 ஆண்டுகளாக குடிநீர் வராத நிலையில் குடிநீர் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வைத்தனர்.