வரும் காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி


வரும் காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி
x

வரும் காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தால் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டுக் கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல் உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சி.வி. கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்து 700-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் தலா ரூ.1,000 நிதியுதவி வழங்கினர்.

அப்போது, அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது,

வெள்ளத்தால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, ஆற்றின் உள்ளே உள்ள மக்களுக்கு மாற்ற இடம் வழங்கவும், அந்தந்த பகுதியிலேயே நிரந்தர புயல் பாதுகாப்பு மையம் அமைக்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து முழு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார். தொடர்ந்து முகாம்களின் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக செய்யப்பட்ட உணவுகளை தரமாக சமைக்கப்பட்டுள்ளதா என அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.


Next Story