நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்-கே.பி.முனுசாமி பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்-கே.பி.முனுசாமி பேச்சு
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசினார்.

திருநெல்வேலி

"வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்" என நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசினார்.

ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 20-ந்தேதி மதுரையில் அ.தி.மு.க. சார்பில் வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மகளிர் அணி செயலாளர் வளர்மதி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தது விபத்து

கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஆட்சியை பிடித்த கட்சி திராவிட கட்சிகள் தான். எத்தனையோ தேசிய கட்சிகள் இருந்தாலும் அவைகளால் தனித்து போட்டியிட்டு தமிழகத்தில் வெற்றிபெற முடியவில்லை.

அந்த வகையில் அறிஞர் அண்ணா தமிழக மக்களின் உணர்வுகளோடும், எண்ணங்களோடும், சிந்தனைகளோடும் சேர்த்து கட்சியை உருவாக்கினார். 55 ஆண்டு கால திராவிட ஆட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து. சில சமயங்களில் நாம் செய்த தவறுகளால் தான் தோல்வி அடைந்துள்ளோம்.

7.5 சதவீத இடஒதுக்கீடு

தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மையாக உள்ளது. இதற்கு காரணம் தி.மு.க. கிடையாது. அ.தி.மு.க. தான். அ.தி.மு.க. ஆட்சியில் தான் கல்வி, மருத்துவம், தொழில் என அனைத்து துறையிலும் தமிழகம் முதன்மை பெற்றது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொண்டுவந்த திட்டங்கள் தி.மு.க. ஆட்சி காலத்தில் மறைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அவை மறுக்கப்பட்டு வருகின்றன.

கட்சியில் பிரச்சினைகள் இருந்தாலும் எங்கள் ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் உயர்வு இல்லை. தண்ணீர் விலை உயர்வு இல்லை. பால் விலை உயர்வு இல்லை. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று தந்தார்.

ஆட்சி மாற்றம்

வருகிற நாடாளுமன்ற தேர்தலை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. பல கூட்டணி கட்சிகள் இருந்தாலும் தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் தான் நேரடி போட்டி. வருகிற தேர்தலில் 40-க்கு 40 என்ற கணக்கில் நாம் வெற்றி பெறுவோம்.

மதுரையில் நடக்கின்ற மாநாடு ஆட்சி மாற்றத்துக்கானதாக அமையும். இந்த மாநாடு எதிரிகளுக்கு நாம் யார் என்று காட்டும் வகையில் அமையும். ஆகையால் நெல்லையில் இருந்து மாநாட்டில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், அமைப்பு செயலாளர்கள் ஏ.கே.சீனிவாசன், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் இன்பதுரை, மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன், மைக்கேல் ராயப்பன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட வர்த்தக அணிச்செயலாளர் செட்டிக்குளம் பஞ்சாயத்து தலைவர் அம்மா எஸ்.செல்வகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.சிவபாலன், பாளையங்கோட்டை பகுதி மாணவர் அணி செயலாளர் புஸ்பராஜ் ஜெய்சன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, வக்கீல் ஜெயபால், ஒன்றிய செயலாளர்கள் கே.பி.கே.செல்வராஜ், அந்தோணி அமலராஜா, முத்துக்குட்டி பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story