நாடாளுமன்ற தேர்தலில்தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவார்கள்


நாடாளுமன்ற தேர்தலில்தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவார்கள்
x
தினத்தந்தி 13 Dec 2022 7:30 PM GMT (Updated: 13 Dec 2022 7:30 PM GMT)

விலைவாசி உயர்வால் மக்கள் கோபத்தில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று பள்ளிபாளையம் ஆர்ப்பாட்டத்தில் தங்கமணி எம்.எல்.ஏ. பேசினார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:-

விலைவாசி உயர்வால் மக்கள் கோபத்தில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று பள்ளிபாளையம் ஆர்ப்பாட்டத்தில் தங்கமணி எம்.எல்.ஏ. பேசினார்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை குறைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து பள்ளிபாளையம் பஸ் நிலைய நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர அ.தி.மு.க. செயலாளர் வெள்ளியங்கிரி வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் செந்தில் முன்னிலைவகித்தார்.

மின்சாரத்துறை முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மின்கட்டணம் உயர்வு

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று கூறினார். இதுவரை அதனை கொடுக்கவில்லை. இளம்பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி உள்ளனர். மின் கட்டண உயர்வை குறைப்போம் என்று கூறிவிட்டு தற்போது 52 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

வருகிற ஜூன் மாதம் முதல் மீண்டும் 6 சதவீதம் அதிகரித்து 77 சதவீதம் உயர்த்த உள்ளதாக தெரிகிறது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பால் விலை, சொத்து வரி உயர்வாலும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

பாடம் புகட்டுவார்கள்

குப்பை வரி என்று புதிதாக தொடங்கி மாதம் 30 முதல் 50 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 138 நகராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதுவரை சுமார் 1½ லட்சம் பேர் தி.மு.க. அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 8 மாதத்துக்குள் 26 கொலைகள் நடந்துள்ளதாக போலீஸ் அதிகாரியே கூறுகிறார். பள்ளிக்கூடம் முன்பு கஞ்சா விற்பனை நடக்கிறது. இதில் இருந்தே தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி தி.மு.க. அரசு மீது கோபத்தில் உள்ளனர். இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு தங்கமணிஎம்.எல்.ஏ. பேசினார்.

கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் சுஜாதா, மாரிமுத்து, சரவணன், ஜெயா, சம்பூர்ணம், தொழில் பிரிவு நிர்வாகி சரவணன், சுரேஷ், நகர பொருளாளர் ்சிவகுமார் எம்.ஜி.ஆர். மன்றம் முருகேசன், முகிலன், முஸ்தபா, முன்னாள் ஒன்றிய செயலாளர் மாரப்பன், ஆலம்பாளையம் பேரூர் செயலாளர் செல்லதுரை, ஊராட்சி தலைவர்கள் சிங்காரவேலு, ரவி உள்பட ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.

ராசிபுரம்

ராசிபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி இணை செயலாளருமான சரோஜா, கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் கந்தசாமி, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் வேம்பு சேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுரேஷ்குமார், நகர அவை தலைவர் கோபால், நகர வங்கி துணைத் தலைவர் வெங்கடாஜலம், ராதா சந்திரசேகர், முன்னாள் கவுன்சிலர்கள் சீனிவாசன், அருணாசலம், ரமேஷ், அமல்ராஜ், பூபதி, முன்னாள் தலைவர் சரோஜினி, நகர மகளிர் அணி செயலாளர் மாதேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விலைவாசி உயர்வைகண்டித்து கோஷங்கள்எழுப்பினர்.

குமாரபாளையம்-திருச்செங்கோடு

குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். நகர செயலாளர் பாலசுப்ரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் திருநாவுக்கரசு, அர்ச்சுணன், ரவி, தனபால், சிங்காரவேல், கவுன்சிலர்கள் பழனிச்சாமி, புருஷோத்தமன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை குறைக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story