தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதானதலைமை காவலர் பணி நீக்கம்


தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 21 Sep 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான போலீஸ் ஏட்டு (தலைமை காவலர்) பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சதித்திட்டம்

தூத்துக்குடி பாத்திமாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் லூர்து ஜெயசீலன் (வயது 47). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அழகு என்பவரை வெட்டிக்கொலை செய்தார்.

கொலையான அழகு, தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு பொன் மாரியப்பனின் (35) தாய் மாமா ஆவார்.

இதற்கு பழி வாங்குவதற்காக லூர்து ஜெயசீலனை கொலை செய்ய வேண்டும் என்று பொன் மாரியப்பன் சதித்திட்டம் தீட்டி உள்ளார்.

கொலை வழக்கில் கைது

அதன்படி பொன் மாரியப்பன், முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் (32) என்பவருடன் சேர்ந்து கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த 9.5.2021 அன்று பொன் மாரியப்பன் உடல்நிலை சரியில்லை என்று மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கூறி விட்டு புறப்பட்டார்.

பின்னர் மோகன்ராஜ் மூலம் லூர்துஜெயசீலனை மீளவிட்டான் ரெயில் நிலையம் அருகே காட்டுப்பகுதிக்கு மது குடிப்பதற்கு அழைத்து சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் ஏட்டு பொன் மாரியப்பன், மோகன்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

பணி நீக்கம்

இதைத்தொடர்ந்து ஏட்டு பொன் மாரியப்பன் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த போலீஸ் துறையின் கட்டுக்கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் போலீஸ் துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்புரிந்த பொன் மாரியப்பனை பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று உத்தரவிட்டார்.

-------------


Next Story