விளாத்திகுளம் தொகுதியில் ரூ.3.64 கோடி மதிப்பில் கிராமச்சாலை..!!


விளாத்திகுளம் தொகுதியில் ரூ.3.64 கோடி மதிப்பில் கிராமச்சாலை..!!
x
தினத்தந்தி 2 July 2023 6:45 PM GMT (Updated: 3 July 2023 9:50 AM GMT)

விளாத்திகுளம் தொகுதியில் ரூ.3.64 கோடி மதிப்பில் கிராமச்சாலை அமைக்கும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

மக்கள் களம் நிகழ்ச்சி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் எட்டயபுரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி எத்திலப்பநாயக்கன்பட்டி கிராமம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் தலைக்காட்டுபுரம் ஊராட்சி, நீராவிபுதுப்பட்டி ஊராட்சி, ராமனூத்து ஊராட்சி ஆகிய கிராமங்களில் மக்கள் களம் என்ற பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.

கனிமொழி எம்.பி.

இந்த நிகழ்ச்சிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், பொதுமக்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி தரப்படும். அண்ணா பிறந்த நாளான செப்.15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி மக்களுக்கான திட்டங்களை அவர் செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.

தமிழர்களுக்கு உதவக்கூடிய...

மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு உதவக்கூடியவர்களாக, மக்களின் கோரிக்கைகளை செய்து தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஆனால், இ்ப்போது மக்களின் ஆதரவோடு நடக்கும் அரசுக்கு பிரச்சினை கொடுத்துக் கொண்டு, தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மத்திய ஆட்சியாளர்களுக்கு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் உதவக்கூடியவர்கள், நம்மை மதிக்கக்கூடியவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை நினைவில் கொண்டு வரக்கூடிய தேர்தலில் வாக்களிக்க வேண்டும், என்று பேசினார்.

சாலைத்திட்டங்கள்

முன்னதாக, முதல்-அமைச்சரின் கிராம சாலைகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எட்டயபுரம் அருகே உள்ள எத்திலப்பநாயக்கன்பட்டியில் ரூ.22.60 லட்சத்தில் 450 மீட்டர், விளாத்திகுளம் சாலையில் இருந்து தலைக்காட்டுபுரம் கிராமத்துக்கு ரூ.29.638 லட்சம் மதிப்பில் 1.62 கி.மீ., தலைக்காட்டுபுரத்தில் இருந்து தங்கம்மாள்புரம் வரை ரூ.42.789 லட்சத்தில் 0,96 கி.மீ., விளாத்திகுளம் சாலையில் இருந்து நீராவி புதுப்பட்டி கிராமத்துக்கு ரூ.1.93 கோடி மதிப்பில் 4.20 கி.மீ., இராமனூத்து கிராமத்துக்கு ரூ.76.95 லட்சம் மதிப்பில் 2 கி.மீ. தூரங்களுக்கு சாலை அமைக்கும் பணிகளை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். மேலும், எத்திலப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.38 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தலைக்காட்டுபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.10.93 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் காசி விஸ்வநாதன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாட்டு வண்டி பந்தயம்

இதேபோன்று, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் மற்றும் எட்டயபுரம் நகர தி.மு.க சார்பில் நேற்று காலையில் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடந்தது. பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்துக்கு 16 கி.மீ. தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கடம்பூர் கருணாகராஜா மாட்டு வண்டி முதலிடம் பிடித்து, 2 பவுன் தங்க சங்கிலியை பரிசாக பெற்றது. சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டி 2-வது இடம் பிடித்து 1½ பவுன் தங்கச் செயினை பெற்றது. 3-வது இடம் பிடித்த நெல்லை மாவட்டம் வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டிக்கு ஒரு பவுன் தங்கச் செயினும், 4-வது இடம் பிடித்த மதுரை அவனியாபுரம் மோகன் சாமி குமார் மாட்டு வண்டிக்கு ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 22 வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயத்திற்கு 4½ கி.மீ. தூரம் நிர்ணயிக்கப்பட்டது. பந்தயத்தை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முதலாவதாக வந்த சண்முகபுரம் விஜயகுமார் மாட்டு வண்டிக்கு ஒரு பவுன் தங்க சங்கிலியும், இரண்டாவதாக வந்த சிவகங்கையை சேர்ந்த சின்னையா மாட்டு வண்டிக்கு ¾ பவுன் தங்க சங்கிலியும், மூன்றாவதாக வந்த துரைச்சாமிபுரம் சுரேஷ்குமார் வண்டிக்கு ரூ.10 ஆயிரமும், நான்காவதாக ந்த இலந்தைகுளம் வீர முனியசாமி வண்டிக்கு ரூ.5 ஆயிரமும்,

முதல் கொடி வாங்கிய சாரதிக்கு 2 கிராம் தங்க மோதிரமும், முதல் பரிசு வாங்கிய மாடு உரிமையாளர்களுக்கு வெள்ளி சட்டை கம்பும் பரிசாக வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இதில் கோவில்பட்டி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் விளாத்திகுளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

நேற்று முன்தினம் மாலையில் பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது இந்த பந்தயத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.


Next Story