திருவள்ளூரில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்' தொடக்கம்
திருவள்ளூரில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் அரசு பள்ளியில் தொடங்கப்பட்டது. விழாவில் கலெக்டர் கலந்து கொண்டார்.
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அனைத்து வகை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களிடையே தன் சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, காய்கறி தோட்டம், கழிவு மறு சுழற்சி மற்றும் நெகிழி இல்லா பள்ளி வளாகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
அதன்பேரில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாப்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டம் தொடக்க விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டம் தொடக்க விழாவில் பள்ளி தூய்மை உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
மரக்கன்றுகள் நடுதல்
தொடர்ந்து பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டினை போற்றும் விதமாக மாதந்தோறும் 20 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பள்ளி வளாகத்துக்குள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத் தொடக்க விழாவில் மதிய உணவு திட்டத்திற்கு உதவும் வகையில் பள்ளி தோட்டம் உருவாக்கும் பொருட்டு காய்கறி விதைகளை தூவி காய்கறி தோட்டம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
கலைநிகழ்ச்சி
மேலும் மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் கலெக்டர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பார்வையிட்டார். விழாவில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.