20-ந் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் வருகை


20-ந் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் வருகை
x

திருவாரூரில், 20-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு திருவாரூர் வருகிறார்.

கலைஞர் கோட்டம்

திருவாரூரை அடுத்த காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் இந்த கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி திறந்து வைக்கிறார்.

மு.க.ஸ்டாலின் இன்று வருகை

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சை வழியாக இரவு திருவாரூர் வருகிறார். நாளை(திங்கட்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

20-ந் தேதி அன்று வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

முதல்-அமைச்சரின் திருவாரூர் வருகையையொட்டி அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.

விழாவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரதிநிதிகள் வருவதால் மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயசந்திரன் மற்றும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story