தொடர் மழையால் ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு
தொடர் மழையால் ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், மேலும் உபரிநீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொள்ளாச்சி
தொடர் மழையால் ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், மேலும் உபரிநீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை
பொள்ளாச்சி அருகே 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை, வடகிழக்கு பருவமழையால் நிரம்பி உள்ளது. மேலும் ஆழியாற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதன் மூலம் பொள்ளாச்சி நகராட்சி, கோவை குறிச்சி -குனியமுத்தூர் மற்றும் பல்வேறு கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் தண்ணீர் கலங்கலாக வருவதோடு பாலாறு கலப்பதால் சுவை மாற வாய்ப்பு உள்ளது.
கவனமாக குளிக்க வேண்டும்
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, தற்போது ஆழியாற்று நீரை அப்படியே குடிப்பதால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. சுத்திகரிப்பு செய்த பிறகே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றனர். வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆழியாறு அணை முழுகொள்ளளவை எட்டி உள்ளது. இதன் காரணமாக மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், பாதுகாப்பு கருதி மேலும் உபரிநீர் திறந்து விடக் கூடும். எனவே ஆழியாற்றிற்கு குளிக்க மற்றும் துணி துவைக்க செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.