சென்னை, நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை


சென்னை, நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
x

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2-ந் தேதி சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் தென்காசி, திருப்பூர், செய்யாறு ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.

பணம் பதுக்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து வருமான வரித்துறையினர் நேற்று தமிழகத்தில் 40 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று தொடங்கிய சோதனையானது நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. நள்ளிரவு வரை சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அதன்பின்னர் சென்று விட்டனர்.

இந்நிலையில், இன்று காலை 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், அபிராமபுரத்தில் ஓய்வுபெற்ற செயற் பொறியாளர் தங்கவேலு வீடுகளில் 2வது நாளாக சோதனை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் அவிநாசியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் 'அ' பிரிவு, ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரின் வீடுகள் மற்றும் அவரின் பெட்ரோல் பங்கு, ஆர்.ஓ., வாட்டர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் வசித்து வரும் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.முருகனின் அலுவலகம், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



Next Story