தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகரிப்பு - வாகன ஓட்டிகள் அவதி
பனிமூட்டம் அதிகரித்துள்ளதால் சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியச் செய்தபடி பயணித்து வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே கடும் பனிமூட்டம் நிலவியது. வருசநாடு மலைப்பகுதிகளில் மழை மிக குறைந்த அளவே பெய்த நிலையில் தற்போது பனிமூட்டம் அதிகரித்துள்ளது.
அதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, மணலூர்பேட்ட மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது சாலை தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியச் செய்தபடி பயணித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்திலும் காலநிலை மாற்றத்தால் வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. அங்கு கடந்த ஒரு வாரம் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இது தவிர தென்காசி, நெல்லை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பனிமூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.