லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி அதிகரிப்பு


லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 Oct 2023 9:15 PM GMT (Updated: 25 Oct 2023 9:15 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி அதிகரித்துள்ளது.

தேனி

முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி அதிகரித்துள்ளது.

நீர்மின் நிலையம்

கூடலூர் அருகே லோயர்கேம்பில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக இந்த நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜெனரேட்டருக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

இந்தநிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இருப்பினும் நேற்று முன்தினம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனையொட்டி லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர் மூலம் 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

மின்சாரம் உற்பத்தி

இதற்கிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வினாடிக்கு 1,333 கன அடி வீதம் தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் கூடுதலாக 118 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.95 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,617 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story