கிராமப்புற வீடுகளுக்கு மின்வினியோகம் உயர்வு: தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு


கிராமப்புற வீடுகளுக்கு மின்வினியோகம் உயர்வு: தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு
x

கிராமப்புறத்தில் உள்ள வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் மின்சாரம் உயர்ந்து இருப்பதாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சார வினியோகமானது தேசிய அளவில் ஊரகப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சார வினியோகத்தை விட உயர்ந்து இருப்பதாக மத்திய அரசு தமிழக அரசை பாராட்டி உள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் வினியோகம், தேசிய சராசரி அளவைவிட கூடுதலாக வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய எரிசக்தித்துறை மந்திரி ஆர்.கே.சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஊரக பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் வினியோகம் தேசிய அளவில் 2018-2019-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2021-2022-ம் ஆண்டில், அது நாளொன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக உள்ளது.

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் 2018-2019-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் வினியோகம், 2021-2022-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதற்கு மத்திய அரசு சார்பில் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் வினியோகம் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவ தயாராக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story