காய்கறி, பழங்கள் விலை உயர்வு


காய்கறி, பழங்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் காய்கறி, பழங்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் ரூ.40 உயர்ந்து ஒரு கிலோ ஆப்பிள் ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

விலை உயர்வு

தமிழகம் முழுவதும் சமீபகாலமாக காய்கறிகள், பழங்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சியிலும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி அக்ரஹார தெருவில் காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகள் உள்ளன. இங்கு கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் தேவையான பழங்கள் மற்றும் காய்கறிகளை இங்கு வந்து வாங்கி செல்கிறார்கள்.

தக்காளி ரூ.120-க்கு விற்பனை

இந்த நிலையில் இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.30 முதல் 60 ரூபாயாக இருந்த தக்காளி கடந்த ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூ.50 முதல் 60 வரை உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.60-க்கு விற்பனையான கேரட், பீன்ஸ் தற்போது கிலோவுக்கு தலா ரூ.10 உயர்ந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர கிலோ அளவில் வெண்டைக்காய் ரூ.40-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.80-க்கும், முட்டைகோஸ், அவரைக்காய் தலா ரூ.100-க்கும், சின்னவெங்காயம் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.20 முதல் 25 வரை, பீன்ஸ் ரூ.110 முதல் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகள் விலை உயர்வால் கிலோ அளவில் வாங்கி வந்த பொதுமக்கள் குறைந்த அளவிலேயே வாங்கிச்சென்றதை காண முடிந்தது.

பழவகைகள்

பழங்களை பொறுத்தவரை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஒரு கிலோ ரூ.180 மற்றும் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஆப்பிள் நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிலோ ஆப்பிள் ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் மற்றொரு ரக ஆப்பிள் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிலோ ரூ.200-க்கும், கடந்த 20 நாட்களாக கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆரஞ்சு நேற்று கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தவிர கிலோ அளவில் திராட்சை ரூ.100-க்கும், மாம்பழம் ரூ.50 முதல் ரூ.80 வரையிலும், மாதுளை ரூ.200-க்கும், சாத்துக்குடி ரூ.100-க்கும், அன்னாச்சி ஒரு பழம் ரூ.60 முதல் 70 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

வாழைப்பழத்தை பொறுத்தவரை கற்பூர வாழை, பூம்பழம் ஒரு டஜன் தலா ரூ.30 முதல் 60 வரைக்கும், செவ்வாழை ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.12 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.


Next Story