முக்கொம்புக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
முக்கொம்புக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முக்கொம்பு மேலணை
கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து கடந்த 4-ந் தேதி 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வந்ததையடுத்து, அங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வழக்கத்தைவிட அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் திருச்சி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. காவிரி கரையோர பகுதிகளில் வசித்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று வரை முகாம்களில் இருந்து யாரும் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மீண்டும் வௌ்ளப்பெருக்கு
தொடர்ந்து 6-வது நாளாக நீர்வரத்து அதிகரித்து இருந்ததால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து குறைய தொடங்கியது.
ஆனால் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்து, வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதில் காவிரியில் 50 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியும் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி-கொள்ளிடத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்நிலையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் காவிரியில் நீர்வரத்தையும், காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றத்தை நேற்று கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டார். மேலும் அந்தநல்லூர் ஒன்றியம், கல்லணை சாலையில் உள்ள காவிரி ஆற்றில் நீர் மிகுந்து திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி மற்றும் கிளிக்கூடு ஆகிய கிராமங்களின் வழியே கொள்ளிடம் கிராமத்திற்கு நீர் சென்றதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாழைகளின் சேதம் குறித்தும், லால்குடி வட்டம் அரியூர், செங்கரையூர், டி.கள்ளிக்குடி மற்றும் அன்பில் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கூழையாற்றில் நீர்மிகுந்து வயல்களில் வரப்பெற்றதையடுத்து, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களின் சேதம் குறித்தும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களின் சேதம் குறித்து அலுவலர்கள் மற்றும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.