மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,600 கன அடியாக அதிகரிப்பு
அணையின் நீர்மட்டம் தற்போது 120 அடியாக உள்ளது.
சேலம்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் லேசான மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது 15 ஆயிரம் கன அடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலை 10 ஆயிரத்து 600 கன அடியாக இந்த நீர்வரத்து மாலையில் 15 ஆயிரத்து 600 கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் அதே அளவு தண்ணீர் வருகிறது. இதனால் அணையிலிருந்து தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அணையிலிருந்து காவிரியில் 10 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
பின்னர் மாலை முதல் காவிரியில் 15 ஆயிரம் கன அடியாகவும் கால்வாயில் 600 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணை நிரம்பிய நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை பகுதிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் காவேரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.