உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படம்
உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படத்தால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
''கலப்படம்... கலப்படம்... எங்கும் எதிலும் கலப்படம்... ஆழாக்கு பாலினிலே அரைப்படி தண்ணீர் கலப்படம், அரிசியிலே மூட்டைக்கு அரை மூட்டை கல் கலப்படம், அருமையான நெய்யினிலே சரிபாதி டால்டா கலப்படம், காபி கொட்டையில் புளியங்கொட்டை முழுக்க முழுக்க கலப்படம்...'' என்ற திரைப்பட பாடல் 1953-ம் ஆண்டு வெளிவந்த 'திரும்பிப்பார்' என்ற படத்தில் இடம்பெற்றது.
அந்த பாடல் வரிகள் இன்றளவும் மெய்ப்பிக்கப்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.
அந்த அளவுக்கு உணவுப்பொருள் கலப்படம் அதிகரித்து விட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், புதிய புதிய உத்திகளை கையாண்டு புதுவிதமான கலப்படத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அதிக லாபம்
கலப்படத்தை 3 வகைகளாக பிரிக்கின்றனர். இயற்கையான கலப்பட பொருட்கள், தெரியாமல் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள், தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள்.
இதில் 3-வது வகையான தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் தான் இன்று பல உணவு பொருட்களின் தரத்தை குறைக்கின்றன. உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
கலப்படம் செய்பவர்களின் முக்கிய நோக்கம், உணவு பொருட்களின் அளவை அதிகரித்து, அதிக லாபத்தை ஈட்டுவது. அதேபோல் உணவு பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோரின் கவனத்தை ஈர்த்து, லாபத்தை அதிகரிப்பது. மக்களின் உடல்நலத்தை பற்றி இந்த சுயநலக் கும்பல் கவலைப்படுவது இல்லை. சமூக நலன்பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்வது இல்லை.
உணவில், குளிர்பானத்தில் கலப்படம் என்று அனைத்து பொருட்களுமே தற்போது கலப்படமாக மாறிவிட்டன. சரி, கலப்பட உணவு பொருட்களை சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டதே என்று நினைத்து, மருந்து சாப்பிடச் சென்றால், மருந்திலும் கலப்படம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
இவ்வாறு அதிகரித்து வரும் உணவு பொருள் கலப்படத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதுபற்றி பெரம்பலூரை சேர்ந்த பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகள் வருமாறு:-
சமையல் எண்ணெய்
பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த இல்லத்தரசி சரணிதா:- தற்போது கலப்படம் என்பது அனைத்து பொருட்களிலும் சர்வ சாதாரணமாகி விட்டது. வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்காக பொதுமக்களின் உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் உணவு பொருட்களில் கலப்படம் செய்கிறார்கள். குறிப்பாக சமையல் எண்ணெய் தற்ேபாது கடைகளில் வாங்குவதற்கு பயமாக உள்ளது. ஏனென்றால் 90 சதவீத எண்ணெய் தரமாக விற்கப்படுவது இல்லை. எனவே கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை நாங்களே வாங்கி மரச்செக்கில் கொடுத்து எண்ணையை வாங்கி கொள்கிறோம். எனவே கலப்படம் செய்பவர்களை அதிகாரிகள் கண்டுபிடித்து கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும். அரசு புதிய சட்டங்களை இயற்றி கலப்படம் செய்பவர்கள் மீண்டும் தொழில் செய்யாதவாறு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரம், ருசி, மணம்
குன்னம் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி மணிமேகலை:- தற்போது எந்த உணவு பொருட்கள் எடுத்தாலும் கலப்படம் தான். மிளகில், பப்பாளி விதையை கலந்து வேறுபாடு தெரியாமல் நாம் வாங்கி வருகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பாலிலும் கலப்படம் நடைபெறுகிறது. அதனால் சுவை, மணம் குறைகிறது. மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் ஆகியவற்றிலும் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள். அவற்றில் வித்தியாசம் தெரியாத அளவுக்கு ரசாயனத்தை கலந்து விற்பனை செய்கின்றனர். தற்போது உண்மை பொருளின் தரம், ருசி, மணம் மக்களுக்கு மறந்து போய்விட்டது.
வேலைக்கு செல்லும் பெண்கள் விரைவில் வேலையை முடிக்கும் பொருட்டு கடைகளில் விற்கும் கலப்பட பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறார்கள். குழந்தைகள் விரும்பி உண்ணும் நொறுக்கு தீனி வகைகளில் கூட கலப்படம் தான் நடைபெறுகிறது. குழந்தைகள் நலனுக்கு பேராபத்தை விளைவிக்கின்றனர். வியாபார நோக்கில் சுயநலமாக பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் கடை முதலாளிகள் செயல்படுகின்றனர். காய்கள், பழங்கள், மளிகை பொருட்கள் அனைத்திலும் கலப்படம் செய்து தான் விற்பனை செய்கின்றனர். மக்கள் தான் விழிப்புணர்வுடன் சிந்தித்து கலப்பட பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்த்தால் தான் நாம் நலமுடன் வாழ முடியும். தரமான உணவு பொருட்களை கண்டறிந்து நாம் உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே மத்திய, மாநில அரசுகள் கலப்பட பொருட்களை தயாரிப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்:- கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்புத் துறையும் தீவிரமாக நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களுக்கும் இதுபற்றிய போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதையும் எங்களால் முடிந்தளவு நவீன காலத்தில் வீடியோக்கள் மூலம் தெரிவித்து வருகிறோம். கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக கலப்படத்தை புகுத்தி கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடிப்பை பார்க்கும்போது வியப்பாகவே இருக்கிறது. அவர்கள் செய்வது தவறு என்று தெரியாமலேயே இதை தொடர்ந்து செய்கிறார்கள். நாங்களும் பாகுபாடு பார்க்காமல் நடவடிக்கை எடுக்கிறோம். பொது மக்களும் உணவு கலப்படம் தொடர்பான புகார்களை 'தமிழ்நாடு புட் சேப்டி கன்சூமர்' (tamilnadu food safety consumer) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கலப்படம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை?
* சாப்பிடத் தகுதியற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், முதலில் அந்த பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு, விளக்கம் கேட்கப்படும். அவர்கள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.
* சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அபராதம், கடைக்கு சீல் வைக்கப்படும்.
* 2-வது முறையும் சம்பந்தப்பட்ட நபர் கலப்படம் செய்வதில் ஈடுபட்டால், அந்த பொருள் மாதிரி உறுதி செய்யப்பட்டு, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். அவருடைய கடை மூடப்படுவதோடு, சிவில் கோர்ட்டு மூலம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் வசூலிக்கப்படும்.
கலப்படத்துக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்
எந்தெந்த உணவு பொருளில், என்ன மாதிரியான பொருளை கலப்படம் செய்கிறார்கள் என்ற விவரம் வருமாறு:-
உணவு பொருட்கள் - கலப்படம் செய்யப்படும் பொருட்கள்
தானியங்கள் - கற்கள், களை விதைகள், சேதம் அடைந்த தானியங்கள், தூசி
நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி - ஸ்டார்ச் பவுடர், மசித்த உருளைக்கிழங்கு, டால்டா
பால் அல்லது தயிர் - ஸ்டார்ச் தூள், தண்ணீர்
டீத்தூள் - செயற்கை நிறங்கள்
காபி தூள் - புளியங்கொட்டை தூள் அல்லது சிக்கரி
பருப்பு வகைகள் - குரோமேட், ரசாயனம் மற்றும் சாயங்கள்
சமையல் எண்ணெய் - கனிம எண்ணெய், செயற்கை நிறங்கள், ஆமணக்கு எண்ணெய்
மிளகாய், மல்லி தூள் - சிவப்பு செங்கல்தூள், ஈய உலோகத்தூள், சாணப் பொடி
கடுகு - அர்ஜெமோன் விதைகள்
மிளகு - உலர்ந்த பப்பாளி விதைகள்
மஞ்சள் தூள் - தொழில்துறை சாயம், மெட்டானில் மஞ்சள் சாயம், சுண்ணாம்புத் தூள்
தேன் - வெல்லப்பாகு, சர்க்கரை