மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Sep 2023 7:00 AM GMT (Updated: 22 Sep 2023 9:27 AM GMT)

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் காலை சிற்றுண்டி திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அரசை அறிவுறுத்தக்கூடிய அமைப்பாக திட்டக்குழு உள்ளது. அரசுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் மாநில திட்டக்குழு செயல்படுகிறது. விடியல் பயணம், காலை உணவுத் திட்டத்தின் தாக்கம் பற்றி திட்டக்குழு அறிக்கை வழங்கியது பயனளித்தது. நான் முதல்வன் திட்டத்தின் தாக்கம் குறித்து ஆராய்ந்து திட்டக் குழு அறிக்கை அளிக்க வேண்டும்.

நான் முதல்வன் திட்டம் மூலம் 13 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் திறன்மிகுந்தவர்களாக உருவாகி வருகின்றனர். நான் முதல்வன் திட்டத்தை மேலும் செழுமைப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விடியல் பயண திட்டம் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.1000 சேமிப்பு கிடைக்கிறது. சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து, வேலைக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மகளிர் உரிமை தொகை பெற்ற பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. புள்ளி விவரம் மட்டுமின்றி கள ஆய்வுகள் மூலம் ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும்.

அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். செலவின அடிப்படையில் இல்லாமல் கிடைக்கும் பயன் அடிப்படையில் திட்டங்களை அளவிட வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அனைவருக்கும் சுகாதாரத்தை உறுதி செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story