காஞ்சீபுரத்தில் சுதந்திர தின விழா - கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்


காஞ்சீபுரத்தில் சுதந்திர தின விழா - கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்
x

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில், நேற்று காலை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பிறகு காவல் துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மூவர்ண பலூனையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட கலெக்டர் பறக்கவிட்டார்.

போலீஸ் துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் மருத்துவத்துறை போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

விழாவில் மொத்தம் 52 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சிவருத்ரையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா, ஜனாதிபதி விருது பெறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிசந்திரன், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் வி.எஸ்.வெங்கடேசன், மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி நயினார், மாவட்ட கைத்தறி துறை உயர் அதிகாரி தெய்வானை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story