'இந்தியா' கூட்டணி நாட்டிற்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது - தி.மு.க. எம்.பி. கனிமொழி
‘இந்தியா’ கூட்டணி ஒட்டுமொத்த தேசத்திற்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தது. பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து 'இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் நேற்று தொடங்கியது. மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக குழு அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கான இலச்சினை (லோகோ) இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'இந்தியா' கூட்டணி நாட்டிற்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருப்பதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியா கூட்டணி ஒட்டுமொத்த தேசத்திற்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த கூட்டணி மாற்றத்தைக் கொண்டு வரும் என மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த நாடு எப்படி இருக்க வேண்டுமோ அதுவாகவே இருப்பதை 'இந்தியா' கூட்டணி உறுதி செய்யும்" என்று தெரிவித்தார்.