தமிழகத்தில் இருந்து முதற்கட்டமாக காசி தமிழ் சங்கமத்துக்கு 216 பேர் பயணம்


தமிழகத்தில் இருந்து முதற்கட்டமாக காசி தமிழ் சங்கமத்துக்கு 216 பேர் பயணம்
x

காசி தமிழ் சங்கமத்துக்கு தமிழகத்தில் இருந்து முதற்கட்டமாக 216 பேர் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் பயணம் செய்த சிறப்பு ரெயிலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பிரதமர் தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டை மத்திய அரசு அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

காசிக்கும், தமிழகத்துக்கும் இருக்கும் பழமையான நாகரீக தொடர்பை உணர்த்தும் வகையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மத்திய கல்வி அமைச்சகம், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி. ஆகியவை இணைந்து நடத்துகின்றன. நாளை (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திரமோடி இந்த நிகழ்வை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

கவர்னர் அனுப்பி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. 2 ஆயிரத்து 592 பேர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அந்தவகையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து வாரணாசிக்கு முதல் குழு புறப்பட்டது. இந்த குழுவில் 216 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு ரெயில் நேற்று மதியம் 12.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. காசி சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்துரையாடினர்.

இதன்பின்பு மதியம் 1.10 மணிக்கு இந்த ரெயிலை கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

அதிகளவு தமிழர்கள்

இந்தக்குழுவில் 103 பேர் திருச்சியில் இருந்தும், 78 பேர் சென்னையில் இருந்தும், 35 பேர் ராமேசுவரத்தில் இருந்தும் புறப்பட்டு சென்றனர்.

நிகழ்ச்சி முடிவில் கவர்னர் ஆர்.என்.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காசி என்பது தமிழ் மக்களின் இதயங்களில் உள்ளது. காசிக்கும், தமிழகத்துக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெருங்கிய உறவு உள்ளது. தமிழ் சங்க இலக்கியங்களில் கூட காசி தொடர்பான குறிப்புகள் உள்ளன. காசியில் அதிகளவு தமிழர்கள் வசிக்கின்றனர்.

நெருங்கிய பிணைப்பு

தமிழ் கோவில்களும் உள்ளன. அங்குள்ள மக்கள் தமிழ் மொழியை மிக அழகாக பேசுவர். இவற்றையெல்லாம் தமிழ் மக்கள் காண வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்த இந்த பயணம் இடையில் மறைக்கப்பட்டது.

இப்போது, பிரதமர் நரேந்திரமோடியின் முயற்சியால், தமிழகத்துக்கும், காசிக்கும் இடையேயான தொடர்பு புத்துயிர் பெற்றுள்ளது. மக்கள் இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் பாரதம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story