இண்டூர் அருகேஅரசு டவுன் பஸ் கவிழ்ந்து 26 பேர் காயம்
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே அரசு டவுன் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 26 பேர் காயம் அடைந்தனர்.
அரசு டவுன் பஸ்
தர்மபுரியில் இருந்து நேற்று மதியம் அரசு டவுன் பஸ் ஒன்று நாகர்கூடல் பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. இண்டூர் அவ்வை நகர் அருகே ஒரு வளைவில் சென்ற போது சாலையோரம் இருந்த பள்ளத்தில் பஸ்சின் சக்கரம் இறங்கியது. இதில் டவுன் பஸ் சாலையோரம் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துள்ளானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சல் போட்டனர். பின்னர் அவர்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியேறினர். இந்த விபத்தில் காளேகவுண்டனூரை சேர்ந்த அம்பிகா (வயது 26), சர்வேஷ் (1½), முனியம்மாள் (65), பங்குநத்தம் சிவகுமார் (41), முருகன் (44), சங்கராந்தி (45), கருபையனஅள்ளி பழனியப்பன் (69), ராமர் கூடல முனிராஜி (61), மிட்டாநூலஅள்ளி ராஜாமணி (50), குறிஞ்சிபுரம் சின்னதாயி (61) உள்ளிட்ட 26 பயணிகள் காயமடைந்தனர்.
விசாரணை
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, துணைத்தலைவர் பெரியண்ணன் உள்ளிட்டோர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
=========