ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்க தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த அறிவுறுத்தல்
ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்க தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க தேர்தல்
தமிழகத்தில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தல் கடந்த 2018-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை 18,468 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் முதல்கட்டமாக நடந்த தேர்தலுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் 4,684 கூட்டுறவு சங்கங்களில் தேர்வான சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து, அந்த சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.
மண்டல அளவிலான கூட்டம்
இதையொட்டி திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக மண்டல அளவிலான அதிகாரிகளுடனான கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் தயானந்த் கட்டாரியா தலைமை தாங்கினார். தேர்தல் ஆணைய செயலாளர் செந்தில்குமார், திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த இணைப்பதிவாளர்கள், தேர்தல் பார்வையாளர்கள், மாவட்டத்தில் உள்ள சரக துணை பதிவாளர், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் செயற்பதிவாளர் கட்டுப்பாட்டில் பணியாற்றும் வீட்டு வசதித்துறை, பால்வளத்துறை, கைத்தறி துறை, தொழில் வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
நியாயமாக நடத்த வேண்டும்
இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள், சங்க துணை விதி திருத்தங்கள் மேற்கொள்ளுதல், சங்க உறுப்பினர் பட்டியலை சரி செய்தல், தேர்தலுக்கான நடத்தை விதிகள், தேர்தல் அலுவலர்களின் சட்டப்பூர்வ கடமைகள் மற்றும் பொறுப்புகள், தேர்தல் நடவடிக்கைகளை காணொளி தொகுப்பு மேற்கொள்ளுதல், வாக்குப்பெட்டிகளை பயன்படுத்துதல் குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் முதல் நிலை சங்கங்களுக்கு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள முதற்கட்ட தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என்றும், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேர்தல் புகார் மனு பதிவேடு மூலம் தேர்தல் தொடர்பான புகார்களை உடனுக்குடன் தீர்வு செய்யவும் தேர்தல் ஆணையர் அறிவுரை வழங்கினார்.