நவம்பர் 15-ந்தேதிக்குள் பயிர்காப்பீடு செய்ய வேண்டும்
பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய நவம்பர் 15-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய நவம்பர் 15-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரத்தில் வேளாண்மைத்துறை சார்பில் பிரதமர் பயிர்காப்பீடு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். அதைதொடர்ந்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்ததாவது:- பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு நெல் பயிருக்கு காப்பீடு செய்ய எச்.டி.எப்.சி. மற்றும் இந்திய வேளாண்மை காப்பீடு நிறுவனம் ஆகியவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் மகசூல் இழப்பு களுக்கு உரிய நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், வருவாயை நிலைப் படுத்தவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பிரீமியம் செலுத்த கடைசி நாளாக வரும் நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நெல் சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.394.50 பிரீமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும். பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு காப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.26,300 வழங்கப்படும்.
பிரீமியம் தொகை
இத்திட்டத்தில் இந்திய வேளாண்மை காப்பீடு நிறுவனத்தில் பரமக்குடி, போகலூர், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி வட்டாரங்களை உள்ளடக்கிய பகுதிகளை சேர்ந்தவர்களும், எச்.டி.எப்.சி.வங்கியில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், நயினார் கோவில் ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய பகுதிகளை சேர்ந்தவர்களும் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.
விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் இ-அடங்கல் அல்லது அடங்கல் படிவத்தை பெற்று விண்ணப்ப படிவம், முன்மொழிவு படிவம், ஆதார் கார்டு நகல், மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவற்றை இணைத்து அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் மற்றும் விவசாயிகளின் வங்கி கணக்கு உள்ள பொதுத்துறை வங்கிகளில் பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
பதிவு
விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது அவர்களின் அனைத்து தகவலும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளும் பதிவு செய்யலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-2017-ம்ஆண்டு சம்பா பருவம் காலம் முதல் பிரதமர் பயிர்காப்பீடு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1,441.40கோடி இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி பயிர் காப்பீடு நிறுவன முகவர்கள் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே விவசாயப் பொதுமக்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வேளாண்மை இணை இயக்குனர் சேக்அப்துல்லா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, பயிர் காப்பீடு நிறுவன வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள், வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.